குடியரசு தின விழாவிற்கான மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி!
குடியரசு தின விழாவிற்கான மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி இன்று மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கும் துறை சார்ந்த வாகனங்களும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் தயாராகி வருகிறது.
குடியரசு தின விழா நிகழ்ச்சி அன்று நடைபெறுவது போலவே 3 நாட்கள் ஒத்திகை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஜன19, 22 ஆகிய 2 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.24) மூன்றாவதாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளும் குடியரசு தினத்தன்று நடைபெறுவது போலவே, செய்யப்பட்டிருந்தது.
ஆளுநர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகை நடந்தது. குடியரசு தினத்தன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஏப்.16-ல் மக்களவை தேர்தல்? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!
தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள், போலீஸார், துணை ராணுவப் படையினர், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பைச்சேர்ந்தவர்களின் 47 வகையான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை பேண்ட், வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. இந்த ஒத்திகையானது ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. குடியரசு தின விழா போல் இன்றும் வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். மங்கள வாத்தியங்கள் உட்பட துறை சார்ந்த 22 அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.