“என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள்" - எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் 2 முறை தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியிருக்கும் சூழலில், அவரை எதிர்த்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இருவரும் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் டொனால்ட் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
பின்னர், பாதுகாவலர்கள் அவரை மேடையிலிருந்து பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது சிறப்பு பாதுகாப்புப் படை நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார்.
இந்த கொலை முயற்சி சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் 2 முறை தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "ஆபத்தான காலம் வரும். கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது. 2 பேர் தனித்தனி சந்தர்ப்பங்களில் என்னை கொலை செய்ய முயன்றனர். டெக்சாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்துக்கு அருகில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்" என பதிவிட்டுள்ளார்.
Please, please triple your protection. If they can come for Trump they will also come for you. @elonmusk
— Ian Miles Cheong (@stillgray) July 14, 2024