"பாவம், அறியாமையால் பேசுகிறார்கள்" - விஜய்க்கு இபிஎஸ் பதிலடி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அதிமுக யார் கையில் இருக்கிறது என்பது தெரியாமல் பேசுகிறார் என்று, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
த.வெ.க. மாநாட்டில் விஜய் ஆற்றிய உரைக்கு மறைமுகமாகப் பதிலளித்த இ.பி.எஸ்., "பாவம், அறியாமையால் பேசுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
விஜய் தனது பேச்சில், "அதிமுக யார் கையில் இருக்கிறது என கேட்கிறார்கள். இது தெரியாமல் ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கிறார். அவரை நம்பி எப்படித் தொண்டர்கள் இருப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிட முடியாது. திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அ.தி.மு.க. தான்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், "சினிமா பின்னணியில் இருந்து வரும் சில புதிய தலைவர்கள், இமாலய சாதனைகளைச் சாதித்தது போல் வசனம் பேசுகிறார்கள். உழைப்பைத் தராமல் பலனை எதிர்பார்க்கிறார்கள்" என்று விஜய் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மீது விமர்சனம் வைத்தார்.
இந்த வார்த்தைகள், அ.தி.மு.க.வின் பலம், அனுபவம் மற்றும் மக்கள் செல்வாக்கு ஆகியவை புதிய கட்சிகளுக்கு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அ.தி.மு.க.வில் இப்போது குழப்பங்கள் இல்லை என்பதை இ.பி.எஸ். வலியுறுத்தினார்.