“மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு குறித்து பல்வேறு குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சட்டபேரவையில் பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் பொது அமைதி நிழவுகிறது. பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இன்றி மக்கள் அமைதியாக இணக்கமாக வாழ்கிறார்கள். இதனால்தான் தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நேர்மை சூழலை தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில விரோத சக்திகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக் கூடிய கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி, இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காக உழைக்க கூடிய நம் தமிழ்நாட்டு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்கட்சியும் துணை போகின்ற வகையில், தூபம் போடுகிறது. அதற்கு சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும் துணை போவது இன்னும் வேதனையளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திவிட முடியுமா? எனத் துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் நடந்தது என எல்லோருக்கும் தெரியும். அதுபோன்ற எந்த கலவரமும் திமுக ஆட்சியில் இல்லை. குற்றங்கள் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப் போடப்படுகிறது. அது ஆளும் கட்சியினராக இருந்தாலும் வழக்குப் போடப்படுகிறது, தண்டிக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி - மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா?
சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி… pic.twitter.com/Vj5ezGOLpk
— M.K.Stalin (@mkstalin) March 28, 2025
இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மக்களை காவல்துறையும் தமிழ்நாடு அரசும் பாதுகாத்து வருகிறது. ஆகவே சில நேரங்களில் நடக்கும் தொடர் சம்பவங்களை வைத்து, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக மக்களை திசை திருப்புவதற்காகவே, வீண் புரளிகளை கிளப்பாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்க துடித்துக்கொண்டிருக்கிற கட்சியாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் எங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துதான் காவல்துறையின் செயல்பாட்டை அளவிட முடியும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக தமிழ்நாடு காவல்துறையையும் அமைதியான மாநிலம் என்று தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய பெயரை கெடுப்பதற்கு துணை போகாதீர்கள்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் அந்த பதிவின் கேப்ஷனில், “தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா - குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்லும்! கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி - மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்களா? சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் வந்து குவிகின்றன! சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி, மக்களைக் குழப்பவும் - திசை திருப்பவும் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. நீங்கள் set செய்ய நினைக்கும் narrative-வுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.