"இந்தியா முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் "இல்லம் தேடி உள்ளம் நாடி" என்ற பெயரில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் "மக்களைத் தேடி மக்கள் தலைவர்" என்ற ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரண்டு நாட்களுக்கு திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருவாரூர் தனியார் அரங்கில் நடைபெற்ற கட்சியினர் சந்திப்பு குறித்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, " ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டில் எங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம். யாருடன் கூட்டணி என்பதை அனைவருக்கும் தெளிவாக சொல்வோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்த கேள்விக்கு, "இதற்கு முன்பும் தனிப்பட்ட முறையில் அல்லாமல், அரசின் மூலமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். அதன் மூலம் மேற்கொண்ட முதலீடுகள் மூலம் எவ்வளவு தொழில்கள் வந்துள்ளன என்பது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும்.
அதை சொல்லாததன் காரணமாக தான் எதிர்க்கட்சிகள் இன்று வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். தற்போதும் 15 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருப்பதாக கூறி இருக்கிறார். அவர் கூறுவது வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் செயல் வடிவம் பெற்று மக்களுக்கு ஆதாயம் வரும்போது தான் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பாராட்டுக்குரிய விஷயமாக இருக்கும்.
அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை. இதுதான் உண்மை. பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் தமிழக அரசியலில் பரவலாக நடக்கக்கூடிய நான் பார்த்திருக்க கூடிய விஷயம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கு ஏற்ப இன்று பிரிந்து இருப்பவர்கள், நாளை கூடலாம். கூடாமலும் போகலாம். இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. இந்த கேள்விக்கு அதிமுக மற்றும் பாமக விடம் தான் பதில் கேட்க வேண்டும்.
எல்லோருக்கும் சமமான சட்டம் இருக்க வேண்டும். தவறு செய்தால் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அரசாங்கம் சொல்வதை தான் காவல்துறை செய்யப் போகிறார்கள். காவல்துறை முதல்வர் கண்ட்ரோலில் தான் இருக்கிறது. முதலமைச்சர் கையில் தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. அதனை அவர் தான் சரி செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பழக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.
இதுவரை தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக தலைமையில் தான் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, திமுக அதிமுகவை தவிர்த்து தனித்து நின்றும், மக்கள் நல கூட்டணி என்றும் கூட்டணி வைத்த கேப்டனுக்கு மக்கள் என்ன ஆதரவு கொடுத்தார்கள்? வாக்கு சதவீதம் மட்டும் நிரூபிக்கப்பட்டது. கேப்டன் ஜெயித்தார். ஆனால் மக்கள் ஏன் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை? ஆட்சியில் பங்கு என்பதை தேமுதிக வரவேற்கிறது.
தங்கம் விலை, சொத்துவரி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களிலும் விலைவாசி உயர்ந்துவிட்டது. இதனை மத்திய மாநில அரசுகள் இணைந்து குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதித்ததால் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைகின்றன. இதை நாம் வரவேற்க வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைவை எதிர்க்கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மட்டும் வரவேற்று இருக்கிறார். மக்களுக்கு நல்லது நடக்கும் எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை நாம் வரவேற்க வேண்டும்.
ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பை இந்திய பிரதமர் மோடி நன்றாக கையாண்டார். ஜப்பான், சீனா, ரஷ்ய அதிபர்களை சந்தித்தார். இந்தியா எப்போதும் எங்களுக்கு நட்பு நாடு, மோடி சிறந்த தலைவர் என்று அமெரிக்கா அடிபணிந்து வருவதற்கு மோடி செயல்தான் காரணம். அமெரிக்கா தான் வல்லரசு. எல்லாரும் எனக்கு அடிமை என்ற எண்ணத்தை மோடி மாற்றி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் தவறாக தேர்தல் நடக்கிறது. இந்தியா முழுவதும் பகிரங்மாக ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். நாங்களும் 20 வருடங்களாக புகார் தெரிவித்தும் தேர்தல் கமிஷன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் நீதி அரசர்களும் தேர்தல் கமிஷனுடன் இணைந்து நேர்மையான தேர்தல் நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.