“நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை!” - நடிகர் சசிகுமார் பேட்டி
நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதில் தவறில்லை என நடிகரும், இயக்குநருமான சசிகுமார் கூறியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் படத்துக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின் பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சசிகுமார் கூறியதாவது:
கேப்டன் விஜயகாந்த் இழப்பு என்பது பேரிழப்பு. கேப்டன் விஜயகாந்த் எப்படி அனைவருக்கும் ஒரே உணவு அளித்தாரோ அதேபோன்று நான் கம்பெனி ஆரம்பித்த போதும் சொன்னேன். இதையெல்லாம் கேப்டன் விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொண்டேன். கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருக்கலாம் , பெரிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்திருக்க முடியும்.
எம்ஜிஆர் இறந்த போது எவ்வளவு கூட்டம் இருந்ததோ அதே கூட்டம் விஜயகாந்த் இறந்த போது இருந்தது, தற்போதும் இருக்கிறது. இன்னும் பொதுமக்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டடத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும். அவர் பெயர் வைப்பதில் தவறில்லை. தலைவர்களெல்லாம் கூடி அந்த முடிவை எடுப்பார்கள்.
இவ்வாறு நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.