“இனி ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்கும்” - சேலத்தில் ஏலியனுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் பக்தர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இனி ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்கும் என ஏலியனை கடவுளாகப் பாவித்து அதன் சிலையை அமைத்துள்ள பாக்யா சித்தர் தெரிவித்துள்ளார்.
சேலம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது. மேலும் சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் லிங்க ரூபத்தில் அமைந்துள்ளது. மேலும் பஞ்சமி வராகி அம்மன், நான்குமுக முருகன், ஐந்துமுக காளி மற்றும் காமதேனு உள்ளிட்ட கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்பதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்தும் கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலை லோகநாதன் என்ற சித்தர் பாக்கியா என்பவர் நடத்தி வருகிறார். இதனிடையே, இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுளாகப் பாவித்து அதன் சிலையைப் பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாக்யா சித்தர் கூறுகையில், ”பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சிலையமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்று தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன் சிலை அமைப்பதற்காக ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததால் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏலியனை வணங்கி மகிழ்ச்சிடையுங்கள்.
இனிமேல் ஏலியனின் வருகை இனி அதிகமாகும். உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ந்து வருகின்றன. உலக நாடுகள் வெளியே சொல்லாமல் மறைக்கிறார்கள். ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள். அவர்களிடம் அளவில்லாத சக்தியும் உள்ளது. மக்களுக்கு எந்தவித கெடுதலும் செய்யமாட்டார்கள். நன்மை செய்ய மட்டுமே நம்மைத் தேடி வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன். ஏலியன் திரைப்படத்தில் வருவது போன்றெல்லாம் இருக்க மாட்டார்கள். மனிதர்களைப் போன்று தான் அவர்களும்” என்று அதிர்ச்சி தகவல்களை பாக்யா சித்தர் தெரிவித்துள்ளார்.