“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” - தயாநிதி மாறன் பேட்டி!
“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்தும், அவரிடம் வாழ்த்தும் பெற்றனர். இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“இந்தியா கூட்டணியில் அங்கமாக திகழ்கின்ற கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற
வந்தோம். கமல்ஹாசன் வருகின்ற 29ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். அவருடைய பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று எங்களுடைய வாழ்த்துக்களையும் கூற வந்தோம். ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்பொழுது மத்திய சென்னைக்கு அதிகம் வரவேண்டும் என கூற வந்தோம். அவர் பணியினால் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்தார்.
காய்ந்த மரத்தில்தான் எப்போதும் கல்லடிப்படும் என்பார்கள். அதுபோல திமுக தான்
முதல் நிலையில் இருப்பது அவர்களுடைய போட்டியிலேயே தெரிகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை முதலமைச்சருக்கு இந்தியா கூட்டணிக்கு எதிரிகளே தென்படவில்லை. எனவே அவர்கள் யாரையும் நாங்கள் போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து ஆல்பம் வீடியோ வெளியிட தயாராக இருக்கிறோம். கொரோனா காலங்களில், மழை வெள்ளம் காலங்களிலும் மக்களுக்கு உறுதுணையாக நின்றது திராவிட முன்னேற்ற கழகம் தான். இது மக்களுக்கு நன்றாக தெரியும்” எனக் கூறினார்.
“கேந்திர வித்யாலயா பள்ளியின் சம்பந்தமாக அமைச்சகத்தில் கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்வே நிலையத்தை அவர்கள் கொடுக்க ஒப்புக் கொண்டு
உள்ளார்கள். சென்ற வருடம் நிலம் பயன்பாட்டிற்கான ஒரு புதிய விதிவிலக்கு
செய்திருக்கிறார்கள். அதில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றால்
இன்னும் சில மாதங்களாகும் என்று கூறியிருக்கிறார்கள். எனவே தேர்தல் முடிந்தவுடன் அந்த இடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வந்துவிடும். இந்தப் பகுதியில் நாங்கள் அனைவரும் கொடுக்கும் வாக்குறுதிகளில் இது முக்கியமான ஒன்றாக இருக்கும்” என்றார்.