ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என்ற சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்
ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு
என எழுந்த சர்ச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர போரட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப்பதிவு செய்யப்படும் என பல்கலைக்கழக சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:
"நேதாஜி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள்
வந்திருந்தனர். 400 பேர் மாணவர்கள் பங்கு பெற்றனர். 2 மணி நேரம் வகுப்புகள்
ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டுப்பற்று பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். தேசப்பற்று நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை.
வருகைப்பதிவு என்று சொன்னால் மட்டுமே மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள்.
இல்லையென்றால் மாணவர்கள் வகுப்புகளுக்கும் செல்லாமல், வெளியே சென்று
விடுவார்கள் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றத்தில் தவறு இல்லை."
இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.