Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதமர் மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து குடியரசு தலைவர் உரையில் ஒன்றுமே இல்லை!” - எம்.பி. கனிமொழி சோமு குற்றச்சாட்டு!

10:43 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

குடியரசு தரலைவர் உரையில் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து எதுவுமே கூறப்படவில்லை என குற்றம் சாட்டி, புள்ளி விவரங்களுடன் மாநிலங்களவையில் உரையாற்றினார் எம்.பி கனிமொழி சோமு. 

Advertisement

குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் திமுகவை சேர்ந்த எம்.பி கனிமொழி சோமு மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு அரசாங்கத்தின் செயல்பாடு நாணயத்தை போன்று இரு பக்கங்களை கோண்டது. நேர்மறை மற்றும் எதிர்மறை பக்கங்களை கொண்டது. ஆனால் குடியரசுத் தலைவர் உரையில் பிரதமர் மோடி 10 ஆண்டு கால ஆட்சியின் நேர்மறை பக்கங்களை பற்றி மட்டும் கூறியுள்ளார். மோடி ஆட்சியின் மோசமான இருண்ட எதிர்மறை பக்கங்கள் குறித்து குடியரசுத்தலைவர் உரையில் கூறப்படவில்லை.

குடியரசுத்தலைவர் உரையில், ‘கடந்த 10 ஆண்டுகளில்’ அல்லது ‘10 ஆண்டுகளுக்கு முன்பு’ என்கிற வார்த்தை அதிக முறை இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. குடியரசுத்தலைவரின் உரை ஆளும் பாஜக அரசின் தேர்தல் பிரச்சார டீசர் போல இருந்தது.

இந்த அரசின் அப்பட்டமான தோல்விகள் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் கூற தவறிவிட்டார். இதனால் குடியரசு தலைவர் உரையில் கூற தவறியதை இந்த அவையில் கூற நான் விரும்புகிறேன்.

மணிப்பூர் கலவரம்:

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று இந்த நாடாளுமன்றத்தில் உள்ள யாருக்காவது தெரியுமா? நாடாளுமன்ற உறுப்பினர்களான நமக்கே தெரியாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? மணிப்பூரில் இனக்கலவரத்தை தடுக்க, அங்கு அமைதி நிலவ, இந்த அரசு என்ன செய்தது என்பது குறித்து குடியரசுத்தலைவர் உரையில் எதுவும் கூறப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி, 70 நாடுகளுக்கு சென்றது குறித்து குடியரசுத்தலைவர் எதுவும் கூறவில்லை. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பலமுறை சென்றுள்ளார். ஆனால் பல மாதங்களாக போராடிய விவசாயிகளை காண மோடி ஒரு முறை கூட செல்லவில்லை.

விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் விவகாரம்:

விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மண்ணின் மைந்தர்களும் விவசாயிகளும் மிகுந்த துக்கத்தில் வாழும் போது, ஒரு நாட்டை வளர்ந்த நாடாக கருத முடியாது.

வேலையின்மை:

நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 10%-ஐ தாண்டியுள்ளது. 2014-ல் வேலையின்மை விகிதம் 5.4 % -ஆக இருந்தது. ஆனால் தற்போது 25-30 வயதுக்குட்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் 30% - ஐ தொட்டுள்ளது. நமது இளைஞர்கள் 40% பேர் வேலையில்லாமல் இருப்பதை இது காட்டுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, 2011-ஆம் ஆண்டை விட 2021-ஆம் ஆண்டில் 87% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

ரூபாய் Vs அமெரிக்க டாலர் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 2013-இல் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.53.75-ஆக இருந்தது, இன்றைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.83.17-ஆக இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள்:

உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்று பறைசாற்றும் ஒரு நாடு இதுபோன்ற சமூக இழிவுகளையும் அவமானத்தையும் எதிர்கொள்வது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. 2014 முதல் SC/ST மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்களில் பிஎச்டி உள்ளிட்ட படிப்புகளில் இருந்து எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகபட்சமாக இடைநிற்றல்கள் ஏற்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில், SC/ST/OBC மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம்எஸ், ஐஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் ஆகியவற்றில் இருந்து வெளியேறியுள்ளனர் மற்றும் 50 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள வளாகங்களில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இது மிகவும் பரிதாபகரமானது. இது நாடு முழுவதும் உள்ள ஐஐடிகள், என்ஐடிகள், ஐஐஎம்களில் நிலவும் ஆபத்தான நிலைமைகளைக் காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் இடைநிறுத்தப்பட்டவர்கள் ஓபிசி மாணவர்களே. இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசினார்.

அதோடு, சைபர் கிரைம், சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவதால் எழும் பதற்ற சூழல், சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவது, அத்தியாவிசய பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆவணங்கள் அடிப்படையிலான புள்ளி விவரங்களை முன்வைத்து ஆளும் பாஜக அரசை விமர்சித்தும், அந்த விவகாரங்கள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறவில்லை என்பது குறித்தும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு எடுத்துரைத்தார்.

Tags :
Central governmentkanimozhi nvn somumpNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesparliamentPMO India
Advertisement
Next Article