“பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” - அலகாபாத் உயர் நீதிமன்றம்!
பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையெனில் காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கோரி ஒரு தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. தம்பதியினருக்கு பாதுகாப்பை வழங்க முடியும், ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தல் உணர்வும் இல்லாத நிலையில், அத்தகைய தம்பதியினர் “ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், துணையாக இருந்து சமூகத்தை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனக்கும், தனது கணவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும், தங்களின் அமைதியான திருமண வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று இருதரப்பு உறவினர்களுக்கும் உத்தரவிடக் கோரியும் ஷ்ரேயா கேசர்வானி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி சவுரப் ஸ்ரீவாஸ்தவா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஷ்ரேயாவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிசெய்த நிலையில், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது. ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம், “போலீஸ் பாதுகாப்பு வழங்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றங்கள் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள, ஓடிப்போன இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அல்ல” என்று கூறியது.
“தனிப்பட்ட பிரதிவாதிகள் (மனுதாரர்களில் இருவரின் உறவினர்கள்) மனுதாரர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தாக்க வாய்ப்புள்ளது என்பதை நிரூபிக்க ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“இருப்பினும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவையான நடவடிக்கை எடுப்பர்” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.