'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை'- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசானது உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்றும் மனுத்தாக்கல் செய்த சி.வி.சண்முகம் தரப்பிற்கு ரூ.10 லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் நீதிபதியின் தீர்ப்பில், ”இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்ட காலம் அதே போன்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த காலத்தை கணக்கிடும்போது இது உள்நோக்கம் கொண்டது என கருதுகிறோம்.குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனு போட்டதை நாங்கள் ஏற்கவில்லை.அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது”
என்று தெரிவிக்கப்பட்டது.