“துணை நிலை ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை” - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!
புதுச்சேரியில் 100-படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை மாநில அரசு வழங்குவதற்கான ஒப்பந்தம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
அதன் பின்னர் முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “அனைத்து நலத்திட்டங்களும் நன்றாக செயல்படுத்தப்படுகிறது. அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆட்சி செய்கிறதே என எதிர்கட்சிகளிடம் கேட்க வேண்டும். நல்ல அரசுதான் நடந்து கொண்டிருக்கிறது. எதுவுமே செய்யவில்லையென்று எப்படி கூறலாம். எந்த திட்டதிலும் குறையில்லை.
அறிவித்த திட்டங்களையெல்லாம் செய்து வருகிறோம். புதிய திட்டங்களை கொண்டு வந்து உடனே சிறப்பாக செயல்படுத்துகிறோம். கடந்த
ஐந்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒன்னுமே செய்யவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசை சட்டமன்றத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏக்களே பாராட்டுகிறார்கள். குறை ஏதும் சொன்னதில்லை. அப்படியே கோரிக்கை வைத்தாலும் அதனையும் செய்து தருகிறோம்.
சொன்னதை செய்து வருகிறோம். எங்களுக்கு புதுச்சேரி மாநிலம்
வளர்ச்சியடைய வேண்டும். உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் மத்திய அரசு நிதி கொடுக்கிறது. அதனை பெற்று வளர்ச்சி பணிகளை செய்து வருகிறோம். வருவாயை உயர்த்தி வருகிறோம். நீட் அல்லாத படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு இந்த ஆண்டிலே செயல்படுத்தப்படும். துணை நிலை ஆளுநரிடம் கலந்து பேசி வருகிறோம்.
எங்களுக்கும் ஆளுநருக்கும், எந்த பிரச்னையும் இல்லை. அப்படி ஏதும்
வெளிப்படுத்தவில்லை. மாநிலத்துக்கு அந்தஸ்து, உரிய அதிகாரம் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும். அதற்கு வேகமான நிர்வாகம் வேண்டும், அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். நிர்வாகத்தில் விரைவாக செயல்பட வேண்டும் என்பதுதான் எண்ணம். அதற்கு தடங்கல் வரும் போது வலியுறுத்துகிறோம். மாநில அந்தஸ்துக்காக இந்த முறை அனைத்து கட்சிகளாலும், வேகமாக வலியுறுத்தப்படுகிற நிலைமை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன அதிகாரம் வேண்டும் என்பதை ஒரு பக்கம்
வலியுறுத்துகிறோம். எங்களுக்கு மட்டுமல்ல, புதுச்சேரியின் எதிர்காலத்தும்,
ஆட்சியாளர்களுக்கும் தேவை என்பதுதான் எண்ணம். இந்த பிரச்னை இன்றைக்கு
மட்டுமானது அல்ல. மத்திய அரசிடம் கேட்டு வருகிறோம். ஆளுநரிடம் இதனை
கேட்கிறோம். வளர்ச்சிக்கு தடங்கள் ஏற்படக்கூடாது. எங்களுடைய அமைச்சர்கள்
மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துகின்றனர். டெல்லிக்கு சென்று பிரதமரை சந்திப்போம்”
இவ்வாறு புதுசேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.