"புதிய வகை கொரோனா பரவல் குறித்து பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா சிங்கப்பூரில் அதிகளவில் காணப்பட்டாலும் பெரிய அளவில் பதற்றம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் தனியார் மழலையர் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா ஆல்ஃபா, பீட்டா , டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான், காமா என்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்தது. கடைசியாக இந்த ஒமிக்ரான் வகை நூற்றுக்கு மேலான உருமாற்றம் அடைந்து, பல்வேறு நாடுகளில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது பரவி வரும் இந்த புதிய வகை கொரோனாவின் பெயர் கே.பி. 2. இவை சிங்கப்பூரில் அதிகளவில் காணப்படுகிறது. இருப்பினும் பெரிய அளவில் பதற்றம் பட வேண்டிய அவசியம் இல்லை. இவை 90% க்கு மேலாக எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தியாவை பொறுத்தவரை 11 மாநிலங்களில் இந்த வகை கொரோனாவின் பாதிப்பு தென்பட தொடங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இருப்பினும் இதன் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறோம். எந்த வகையிலும் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.