“சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை!” - வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதன் மூலம் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.
அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன?
நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. இதனை அடுத்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார். மேலும், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று தெரிவித்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையின் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது எனவும் இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என தெரிவித்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்னொரு பக்கம் இதே விவகாரத்தில் கோ வாரண்டோ அளக்கும் வழக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ.ராசா எம்பி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு நீதிபதி அனிதா சம்பத் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சனாதன பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு உள்ளன.