“கொட்டுக்காளி படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது” - இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தகவல்!
‘கொட்டுக்காளி’ படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது எனவும், லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருப்பதாகவும் அப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தெரிவித்துள்ளார்.
‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்சன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் 53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்றதுடன், 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து பி.எஸ்.வினோத்ராஜ், “நான் இயக்கிய ‘கூழாங்கல்’ இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. அந்த நம்பிக்கையில் இதை இயக்கி இருக்கிறேன். ‘கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் புழங்கும் மண் சார்ந்த ஒரு வார்த்தை. அதற்கு, பிடிவாதத்துடன் இருப்பது, தனக்கு விருப்பப்பட்டதை வெளிப்படையாகச் சொல்வது என்று அர்த்தம். இந்தக் கதைக்கு அது பொருத்தமாக இருந்தது. இதில் சேவலும் ஒரு கதாபாத்திரமாகப் படத்தில் வரும்.
பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். நம் வாழ்வியலுக்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருக்கிறோம். இது ஒரு பயணத்தின் கதை. அந்தப் பயணத்தின் வழியாக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் விதமாக இந்தப் படம் இருக்கும். பட விழாக்களில் வெளியாகும் உலகப் படங்களை பார்த்துதான் என் சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். நம் வாழ்க்கையையும் உலக பட விழாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தையும் அப்படித்தான் உருவாக்கி இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.