“சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” - கனிமொழி எம்பி பேட்டி
சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும்
இருக்காது என எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
தமிழ்நாடு அரசு மக்களுக்கு அது யாராக இருந்தாலும் திமுக அரசு எதிராக
செயல்பட்டதில்லை. பெரும்பான்மை இந்து மக்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்காக உழைக்க கூடிய இயக்கம் திமுக. பெரும்பான்மை
என பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்ய கூடியவர்கள் தான் அதற்கு எதிரானவர்கள்.
ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடிய அரசியலை ஒதுக்க வேண்டும் என இதை
தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறோம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய்யிக்கும்
அரசியலுக்கு வர எல்லா உரிமையும் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதலமைச்சரின் நல்லாட்சிக்கான பரிசாக மக்கள் வாக்களிப்பார்கள். யாருடைய அரசியல் எப்படி இருக்கும் என ஆரூடம் சொல்லும் நிலையில் நான் இல்லை. அரசியல் கள்த்திற்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டு வந்து உள்ளார். அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கருத்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.