"தாத்தா இல்லை... ஸ்டாலின் மட்டும் தான்" - குழந்தையிடம் செல்லமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு மு.க.ஸ்டாலின், பள்ளி சிறுமியிடன் வேடிக்கையாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்.
இதையும் படியுங்கள் : ஆனந்த் அம்பானி திருமண வரவேற்பில் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ
அப்போது, தனது அருகில் இருந்த சிறுமியிடம் நான் யாரென்று தெரிகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, ”தெரியும், ஸ்டாலின் தாத்தா” என்று பதிலளித்தார். இதனைக் கேட்டவுடன் ஸ்டாலின் தாத்தா இல்ல, வெறும் ஸ்டாலின் தான் என்று சிரிப்புடன் உரையாடினார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.