“எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை!” - கே.பாலகிருஷ்ணன்
எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மோடியின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து நாடு தழுவிய கண்டன இயக்கத்தை ஒரு வார காலம் நடத்த உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநில
சுயாட்சி பறிக்கப்படும், கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் முடிந்த பின்பும் கூட மத்திய அரசு புதிய ஆளுநரை நியமிக்கவில்லை. சிபிஎம் பொறுத்தவரை ஆளுநர் பதவி தேவை இல்லை என கருதுகிறோம். மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து போட்டி அரசியல் நடத்த பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியானை அதிகாரத்தை கொடுத்து போட்டி அரசியல் செய்ய உத்தரவிடுகிறார்கள், ஆளுநர் பதவி இல்லாத சூழ்நிலை உருவாக வேண்டும். மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் ஒரு நபரை ஆளுநராக மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
மத்திய அரசு இயற்கை இடர்பாடு ஏற்பட்டால் வெறும் பார்வையாளராக இல்லாமல் மாநில அரசுக்கு உரிய உதவிகளை நிதியை கொடுக்க வேண்டும். இயற்கை இடர்பாடு நேரத்தில் பழிவாங்கும் போக்கு ஏற்படக்கூடாது.
தமிழக அரசானது அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர், போக்குவரத்து ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கூட்டணியில் பிரச்சனை என்பது ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போலத்தான். அது உடனே சரியாகிவிடும். அதற்காக அது கூட்டணிக்குள் மோதலோ, முரண்பாடோ என்ற வகையில் எடுத்துக் கொள்ளக்கூடாது, அதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. எடப்பாடி பழனிசாமியின் பாஜக கூட்டணி போல அடிமை கூட்டணி திமுக கூட்டணி இல்லை, இது தனி கொள்கை கொண்ட கூட்டணி. பழனிசாமி கூட்டணியில் வாய் மூடி மவுனியாக இருப்பார். தமிழக உரிமையை காவு கொடுத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஏற்படும் பிரச்சனை பேசி விவாதித்து தீர்வு காணப்படும்.
எடப்பாடி பழனிசாமி கூறுவது போல திமுக கூட்டணியில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோருவதை குழப்பம் என எப்படி சொல்வார். கோரிக்கையை நிறைவேற்ற சொல்வதில் என்ன குழப்பம். நாங்கள் அதிமுக வைத்தது போல் அடிமை கூட்டணி இல்லை. மத்திய அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம்.