பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்றாட உணவு பொருட்களை அடைக்க பயனபடுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை எனவும் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.