"மிகப் பெரிய சதி உள்ளது" - வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விஜேந்தர் சிங் கருத்து!
வினேஷ் போகத் தகுதிநீக்கம் இந்தியாவிற்கும், இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பாஜக நிர்வாகியுமான விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஒலிம்பிக்ஸ் குத்துச் சண்டை போட்டிகளில் கடந்த 2008-ல் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த விஜேந்தர் சிங் (தற்போதைய பாஜக நிர்வாகி) வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
“இது இந்தியாவிற்கும், இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி. வினேஷ் போகத்தின் விளையாட்டு செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. சிலருக்கு அந்த மகிழ்ச்சியை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். 100கிராம் எடையில் என்ன பிரச்னை இருக்கிறது? அவரது வெற்றியால் யாருக்கோ சில பிரச்னைகள் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு 100 கிராம் எடையைக் குறைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நானும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற விஷயங்களை என்றும் பார்த்ததில்லை. வீரர்களுக்கு மாவுச்சத்தோ புரதச்சத்தோ தேவைப்படாது. எங்களுக்கு எடையை மீட்பது மிக முக்கியம். இறுதிப்போட்டி நடக்க இருப்பதால் எடை கட்டுப்பாடே வினேஷ் போகத்தின் முதல் நோக்கமாக இருந்திருக்கும். பசியைக் கட்டுப்படுத்திக் கொள்வதால், உடல் சோர்வு ஏற்படும். எனவே ஊட்டச்சத்து நிபுணரிடம் செல்வோம். ஆனால், உணவு உட்கொள்ளுதலை விட உடல் எடையே வீரர்களின் முதல் கவனமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.