“உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம்” - அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வர கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்று அமெரிக்க திட்டமிட்டிருந்த கனிம ஒப்பந்த முயற்சிகள் தோல்வியடைந்தது. அதனால், போரில் உக்ரைக்கு வழங்கிய ராணுவ மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற உதவிகளை அமெரிக்க அதிபர் நிறுத்திவைத்தார்.
இதையடுத்து அதிபர் டிரம்ப், இரு நாடுகளையும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். செளதி அரேபியாவில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி சமரசத்திற்கு இடமில்லை என்ற வகையில் பேசினார். இதில் உக்ரைன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தது. இது அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வழி வகுத்தது. தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நிறுத்தத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். பின்பு அதிபர் டிரம்ப் நேற்று, புதினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று புதினுடன் பயனுள்ள கலந்துரையாடல் நடந்தது. இதன் மூலம், இந்த கொடூரமான ரத்தக்கறை மிகுந்த போரை முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைன் படை வீரர்களை, ரஷ்ய ராணுவம் சூழ்ந்துள்ளது. அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு புதினைக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் கொல்லப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு கொடூரமான படுகொலையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.