போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை - உச்சநீதிமன்றம் தகவல் !
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நிதியுதவியுடன், அந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு காணொலிகளை வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மார்ச். 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் குவிந்து கூடுதல் சுமை உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை. அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. போக்ஸோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், போதிய நீதிபதிகள் இல்லாததால் அந்த நீதிமன்றங்களிலும் கூடுதல் பணிச்சுமை நிலவுகிறது.
இதனால் போக்ஸோ வழக்குகள் தொடர்பாக 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.