சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் - திரளான பக்தர்கள் வழிபாடு!
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ
சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள், சமேத
பிரம்மபுரீஸ்வரர், சட்டை நாதர், தோனியப்பர் ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலித்து
வருகின்றனர். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவம் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருமுலைப்பால், சகோபுரம்,
திருக்கல்யாணம் உள்ளிட்டவை வெகுசிறப்பாக நடைபெற்றன. இதனையடுத்து திருவிழாவின் 13 ஆம் நாளான நேற்று தெப்ப உற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்பாளுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தீர்த்த குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.