உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்!
உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்திற்கு சரிவைச் சந்திந்துள்ளது.
உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியா ஐந்தாவது தன்னை தக்கவைத்துக் கொண்டது. ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய காலாண்டில் 3.3% ஆக சரிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலண்டில் 0.4% சரிந்தது.
ஐ.எம்.எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4291 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,730 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதனடிப்படையில் ஜப்பான் 4வது இடத்திற்கு சரிந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டுத் தேவையின் முக்கிய தூண்களான நுகர்வு மற்றும் மூலதனச் செலவினங்களில் உள்ள மந்தம்தான் பொருளாதார சரிவிற்கான முக்கிய காரணங்கள் என ஜப்பானிய பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தாம் மேலும் அடுத்தடுத்த காலாண்டில் பொருளாதாரம் 1.4% சரிவைச் சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே வரும் 2030 ஆம் ஆண்டில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்தள்ளி உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தையும் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் விரைவில் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த நிலையில் ஜப்பானின் வீழ்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.