உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன. 14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் கடந்த சில நாள்களாக மேற்கொண்டனர்.
இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, போட்டியாளர்களின் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.