ஏ.ஆர்.டி ஜுவல்லரி சொத்துக்களை முடக்கும் பணி தீவிரம்! ரூ.1500 கோடி மோசடி விவகாரத்தில் நடவடிக்கை!
ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிக வட்டி தருவதாக கூறி ஏ.ஆர்.டி ஜுவல்லரி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர். சென்னை முகப்பேரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி நிதி நிறுவனம் ரூ.1500 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
நொளம்பூரில் ஏ.ஆர்.டி.வணிக வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 9 மணி நேர சோதனையில் கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 13 லேப்டாப், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னையில் உள்ள சொத்துக்களை முடக்கும் பணியில் வருவாய்த்துறை அலுவலர் அனுசியா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.