சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
சுதந்திர தினத்தையொட்டி கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15 அன்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து 78வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வழக்கமான ஆண்டுதோறும் நாடு முழுவதும் உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்படும். சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தங்கள் வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதால், கொடிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. இதற்காக, கோவையில் உள்ள அச்சகங்கள் மற்றும் தையல் தொழிற்சாலைகளில் பல்வேறு அளவுகளில், பல்வேறு வகையான துணிகளைக் கொண்டு தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கதர், மைக்ரோ துணி, வெல்வெட் துணி போன்ற பல்வேறு வகையான துணிகள் கொண்டு தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆர்டர்கள் குவிந்து வருவதால், கோவையில் உள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். இதுகுறித்து பேசிய உற்பத்தியாளர், "சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடிகளுக்கான தேவை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு தேவை இன்னும் அதிகமாக உள்ளது. நாங்கள் நாள் முழுவதும் பணிபுரிந்து கொடிகளை தயாரித்து வருகிறோம்" என்றார்.