திருமணக் கோலத்தில் மாரத்தான் ஓடிய பெண்... நெஞ்சை உலுக்கும் பின்னணி... நடந்தது என்ன?
இங்கிலாந்தின் லின்கன்ஷையரைச் சேர்ந்தவர் லோரா கோல்மன்-டே (Laura Coleman-Day) . இவர் சமீபத்தில் நடைபெற்ற லண்டன் மாரத்தானில் பங்கேற்றார். அப்போது அவர் திருமண கோலத்தில் மாரத்தான் ஓடினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நெஞ்சை உலுக்கும் வகையான பதிலளித்தார். லோரா தனது கணவரின் நினைவாக திருமண உடையுடன் மாரத்தான் ஓடியதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தனது கணவர் சாண்டர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக லோரா தெரிவித்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 2024ம் ஆண்டு உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். லோரா கடந்த 12 மாதங்களில் 13 மாராத்தான்களில் ஓடியுள்ளார். இது அவரது 13-வது மாரத்தான் ஓட்டமாகும்.
கனவரின் நினைவாகவும், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக பணம் திரட்டவும், இந்த மாரத்தானில் பங்கேற்றதாக லோரா தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு லோரா - சாண்டரை திருமணம் செய்துகொண்டார். இந்த சூழலில், லண்டன் நடைபெற்ற தினம் லோரா - சாண்டரின் 6வது திருமண நாள் என்று அவர் தெரிவித்தார். லண்டன் மாரத்தான் 26.2 மைல் தூரம் நடைபெற்றது.
இதில் 23 மைல் வரை லோரா மாரத்தான் ஓட்டத்திற்கான உடையை அணிந்திருந்தார். பின்னர் ஓடுவதை நிறுத்திய லோரா தனது திருமண உடையை அணிந்துக் கொண்டு மீண்டும் ஓடுவதை தொடங்கி 26.2 மைலில் மாரத்தானை முடித்தார். லோராவுடன் கெர்ன்ஸியிலிருந்து வந்த அவருடைய தோழி கேட் வால்ஃபோர்டும் ஓடினார். கேட் வால்ஃபோர்டின் நண்பரும் ரத்த புற்றுநோயால் 2018-ல் உயிரிழந்துள்ளார்.
இருவரும் Anthony Nolan எனும் ரத்தம் மற்றும் ஸ்டெம் செல்கள் தொடர்பான தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் முயற்சியில் உள்ளனர். இதுகுறித்து பேசிய லோரா, "இந்த நாளையும், என் கணவரையும் நினைவுகூர இதைவிட சிறந்த வழி வேறு ஒன்றில்லை. சூடாக இருந்தாலும், அந்த உடையுடன் ஓட்டத்தை முடித்தது மிகவும் சிறந்த அனுபவம்" என கூறினார்.