மணமகன் வராததால் மீண்டும் மாப்பிள்ளையான அக்கா கணவர்...? திருமண நிதியுதவி திட்டத்திற்காக அரங்கேறிய அவலம்!
திருமணத்திற்கு மணமகன் வராததால், தன்னுடைய அக்கா கணவரை மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முதலமைச்சரின் திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ் ரூ.51,000 வழங்கப்பட்டு வருகிறது. மணமகளின் வங்கிக்கணக்கில் ரூ.35,000 செலுத்தப்பட்டு, மணமக்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்காக ரூ.10,000, திருமண சடங்கு ஏற்பாடுகளுக்காக ரூ.6,000 என மொத்தம் ரூ.51,000 வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் மாநில அரசின் நிதியுதவியுடன் சுமார் 200 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அரசின் உதவித்தொகையை பெறுவதற்காகவே இதில் ஏற்கனவே திருமணம் ஆனவர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற பல்வேறு கட்டுப்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு விதித்தது.இந்நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி ஜான்சி மாவட்டத்தில் அரசின் நிதியுதவியுடன் 132 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் குஷி என்ற பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விருஷ்பன் என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருமணத்திற்கு விருஷ்பன் வராத நிலையில், அரசின் உதவித்தொகையை பெறுவதற்காக தன்னுடைய அக்கா கணவரையே குஷிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இதையும் படியுங்கள் : “திமுக அழிந்துபோகும் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டனர்” - டி.ஆர்.பாலு பதிலடி
இதுகுறித்த தகவல் கசிந்ததையடுத்து, இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்கள், விவரங்கள் சரிபார்க்கப்பட்டே முதமைச்சரின் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொகையானது அனுப்பப்படும் என்றும், குஷி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உ.பி. சமூக நலத்துறை அலுவலர் லலிதா யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் குஷியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களும் திரும்பப் பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.