“போர் வடக்கு நோக்கி நகர்கிறது” - லெபானானின் தொடர் வெடிப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் கருத்து!
ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் சிறுமி உட்பட 12 பேர் உயரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என லெபனான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த பதற்றமே தணியாத நிலையில், அடுத்த நாளே ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
பேஜர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், வாக்கி டாக்கிகள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேஜர்கள் வாங்கிய அதே நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லாவும், ஈரானும் உறுதியளித்துள்ளன. ஆனால் இதற்கு இஸ்ரேல் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியின் மோதலின் மையம் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் கூறுகையில்,
படைகள் வடக்கு எல்லை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. போர் தற்போது புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. போரின் மையம் தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நாங்கள் வடக்கு பகுதிக்கு படைகள், வளங்கள் மற்றும் ஆற்றலை ஒதுக்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 42,000பேர் கொல்லப்பட்டனர். 16,456 குழந்தைகள் மற்றும் 11,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப் பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது. காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் ஹிஸ்வுல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திரும்ப வைப்பது போரின் இலக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையேதான் ஹிஸ்புல்லா தாக்குதல் நடைபெற்றுள்ளது.