உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் : மறைமுகமாக மிரட்டும் ட்ரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ட்ரம்ப் கவனம் செலுத்தி வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்போதைய தனது நிலைப்பாட்டை ஜெலன்ஸ்கி கைவிட்டால் மீண்டும் இந்த சேவை தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்கிவந்த பொருளாதார உதவிகளை அமெரிக்கா நிறுத்தி வந்த நிலையில், தற்போது ராணுவ உதவிகளை நிறுத்தியுள்ளது. இந்தப் போரில் ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவாக இருந்துவந்த நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
மேலும் 3 ஆண்டுகளாக தாங்கள் அளித்துவந்த பொருளாதார உதவிக்கு பதிலாக உக்ரைன் நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி பின்னர், பின்னர் அமெரிக்கா தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்தால் ஒப்புக் கொள்வதாக கூறினார். ஆனால் அதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்த நிலையில் ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
ரஷ்யாவால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ராணுவ சேவைகளையும் நிறுத்தியுள்ளது.