"மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்" - பிரதமர் #Modi உறுதி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகியது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து, நாளை (பிப். 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வளமும், வளர்ச்சியும் பெறவேண்டுமென நான் கடவுள் மகா லெட்சுமியை பிரார்த்திக்கிறேன். நாட்டின் ஏழைகள், நடுத்தர மக்களை கடவுள் மகா லெட்சுமி தொடர்ந்து ஆசிர்வதிக்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன். இந்தியா ஜனநாயக நாடாக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மிகவும் பெருமிதம் அளிக்கிறது.
உலக அரங்கில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எனது 3வது ஆட்சி காலத்தில் இது முதல் முழுமையான பட்ஜெட் ஆகும். 2047ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும். அதற்காக தற்போதைய மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.