“பயணம் வென்றது! களமும் வெல்லட்டும்!” - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது போல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குக்கேற்ப, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2022-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு நாடுகளில் துபாய், அபுதாபி ஆகிய இடங்களுக்கான பயணம் வெற்றிகரமாக அமைந்தது. 2023-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்தேன். 2024-இன் தொடக்கத்தில் ஐரோப்பாவின் நான்காவது பொருளாதார நாடான ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் பயணத்தை மேற்கொண்டேன்.
தமிழ்நாடு அரசின் தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சென்னையில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலகத் தரத்துடன் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவிருப்பதை எடுத்துரைத்து, நமது மாநிலத்தில் உள்ள தொழிற்கட்டமைப்புகளை விளக்கி, ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து, “ஐரோப்பா கண்டத்தில் நான்காவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாகத் திகழும் ஸ்பெயின் நாட்டில் ஃபார்ச்சூன் 500-இல் உள்ள நிறுவனங்களில் 8 நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், ஃபார்ச்சூன் 2000-இல் உள்ள நிறுவனங்களில் 20 நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் 9 ஸ்பெயின் கம்பெனிகள் முதலீடுகள் செய்திருப்பதால் நீங்களும் நம்பிக்கையுடன் முதலீடுகள் செய்யலாம்.
மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாகவும், தமிழ்நாடு அரசின் தொழிற்கட்டமைப்பின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி ரூ.3,440 கோடி அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைக் உடன்பிறப்புகளிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
சீனாவிலும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் நிறைந்திருக்கிறார்கள். இளைஞர்களின் விகிதம் குறைவு. ஆனால், தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகம். அவர்கள் மிகப் பெரும் மனிதவளமாக இருப்பது தான் நமக்கு பலம். அத்தகைய இளைஞர்களின் கல்விக்காவும், திறன் மேம்பாட்டிற்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளை நினைத்துப் பார்த்தேன்.
வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த்திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் லாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது. இந்தப் பண்பாட்டுப் பெருமையும் பன்முகத்தன்மையும்தான் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?
கோட்டைகள் போலவே பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய தேவாலயங்களான கதீட்ரல்களும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கட்டிய திருக்கோயில்கள் பலவும் திராவிடக் கட்டடக் கலையின் சின்னங்களாக விளங்குவது போல, ஐரோப்பியக் கட்டடக் கலையின் அடையாளங்களாக இந்த தேவாலயங்கள் திகழ்கின்றன.
திமுக அரசு அமைந்த பிறகு, கீழடி அகழாய்வுகளில் கிடைத்த தமிழரின் நாகரிக - பண்பாட்டு வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் மட்டுமல்ல, தமிழர் என்ற உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டில் உள்ள நம் கட்சியினரிடமும், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களைச் சந்தித்த இனிமையான நிகழ்விலும் இதனைக் கூறினேன்.
பயணத்தில் இருந்தாலும் எனக்குள்ள பொறுப்புகளையும் அதற்குரிய பணிகளையும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் அது குறித்துக் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். கழகத்தின் தலைவர் என்ற முறையில், உடன்பிறப்புகளான உங்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் கழக நிர்வாகிகளிடம் தொடர்ந்து உரையாடினேன்.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்து அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஆலோசனை நடத்தி, கள நிலவரத்தை எடுத்துரைத்து, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. தலைமையின் சொல்லை உத்தரவாக - கட்டளையாக ஏற்றுச் செயல்பட்டு வருவது மகிழ்வைத் தருகிறது. இது எப்போதும் தொடர வேண்டும்.
ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது போல, தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.