வெளியானது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர்!
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள திரைப்படம் “ஏழு கடல் ஏழு மலை”. இப்படத்தில் நிவின் பாலி உடன் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு என்.கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்று, சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றது.
தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் 'நோ லிமிட்' எனும் பிரிவில் 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வானது. இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
மேலும், இப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.