For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

SRK என்னும் மூன்று எழுத்து மந்திரம்... இன்று பிறந்தநாள்!

07:29 AM Nov 02, 2023 IST | Web Editor
srk என்னும் மூன்று எழுத்து மந்திரம்    இன்று பிறந்தநாள்
Advertisement

2023-ம் ஆண்டில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் தலா 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் எப்படி பாலிவுட்டின் கிங் கான் ஆனார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

Advertisement

பாலிவுட் பாஷா என்றும் கிங் ஆஃப் ரொமான்ஸ் என்றும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை...

டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஷாருக்கானின் ஆரம்பகால வாழ்க்கை வசந்தம் நிறைந்ததாக இல்லை. பெற்றோர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட மனச்சிதைவினால் பாதிக்கப்பட்ட சகோதரியை கவனித்துக்கொள்ளும் கடமையும் அவருக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் ’தில் டரியா’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு உண்டான முகவெட்டு உள்ளிட்ட எந்த அம்சமும் இல்லாத தனக்கு, சினிமா என்பது பெருங்கனவு என்று எண்ணிக்கொண்டார் ஷாருக்கான். ஆனால் அடுத்து அவர் நடித்த ஃபவுஜி தொடருக்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் அவரை சினிமாவின் பக்கம் திசை திருப்பின. பள்ளிக்காலத்தில் ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய ஷாருக்கானுக்கு தான் ஒரு விளையாட்டு வீரனாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் விதி இன்று அவரை உலகின் வெற்றிகரமான நடிகர்கள் பட்டியலில் இடம்பெறச்செய்துள்ளது.

பாலிவுட்டின் கதவுகளைத்தட்ட டெல்லியில் இருந்து மும்பை வந்த ஷாருக்கானை தான் இயக்கிய ’தில் ஆஷ்னா ஹை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகை ஹேமமாலினி. அன்று தொடங்கிய திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை கலெக்ஷன் கிங் ஆக வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது மானசீக காதலனாகவே கொண்டாடினார்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தாலும் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி, முகபாவனைகள் ரசிகைகளை கட்டிப்போட்டன.

தனக்குத் தெரிந்ததை திரைமொழியாக்கி எப்படி வசூலில் சாதனை படைப்பது என்பதில் அதிக கவனம் செலுத்திய ஷாருக்கான் பாலிவுட்டின் தவிர்க்க முடியாக ஹீரோவாக மாறினார். அவரது டைமிங் ஹியூமர் பல இடங்களில் ரசிக்க வைத்திருந்தாலும் அவருக்கு சிக்கல்களையும் தேடித்தந்தது. புகழின் உச்சிக்கு சென்றாலும் அமீர்கான், சல்மான் கான் போன்றோருடன் ஏற்பட்ட மோதல்களால் சர்ச்சைகளுக்கும் தீனி போட்டார் ஷாருக்கான்.

சக்தே இந்தியா, ஸ்வதேஷ், ஹேராம் போன்ற நடிப்புக்கு பேர் சொல்லும் படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார் ஷாருக்கான். அர்ப்பணிப்புடன் தனது கதாபாத்திரத்தை அணுகும் ஷாருக்கான் தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியவர். தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என இரட்டை குதிரை சவாரி செய்து அதிலும் வெற்றி கண்டார்.

தான் நடிக்கும் படங்களில் தன்னையே விமர்சனம் செய்யும் காட்சிகளையும் வைப்பது இவரது இன்னொரு பரிமாணம். மிகப்பெரிய ஸ்டார் ஆன பிறகும் இவர் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஷாருக்கானுக்காகவே ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. ஒருமுறை ஹைதராபாத்தை சேர்ந்த ராம கிருஷ்ண குக்கில்லா என்பவர் கோன்பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு தவறாக பதிலைக் கூற, அதனால் பரிசாக கிடைக்க வேண்டிய பெருந்தொகையை இழந்தார்.

ஆனால் அந்த கணத்திலேயே தனது கையில் கட்டியிருந்த சுமார் ஒன்றேகால் லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரத்தை அவருக்கு பரிசாக தந்தார் ஷாருக்கான். இப்படி ரியலிட்டி ஷோக்களில் அவர் நிகழ்த்திய ஆச்சரியங்கள் ஏராளம். 2005-ம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற இந்த பாலிவூட் கிங் கான் ஃபிலிம்வேர் விருதிற்கு 30 முறை பரிந்துரைக்கப்பட்டு 15 முறை விருதுகள் பெற்றுள்ளார்.

58 வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஷாருக்கான் இன்றும் உலக அளவில் வசூலை வாரிச்சுருட்டும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் தொடர அவர் தனக்குத் தெரிந்ததை தரமாக செய்வதே காரணம்...

வாழ்த்துகள் எஸ்.ஆர்.கே.!

Tags :
Advertisement