வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு...மீட்புப் பணிகளில் களமிறங்கிய அதிகாரிகள்!
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் கொண்ட குழு கேரளம் சென்றடைந்தது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போதுவரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து 50 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை 4 மணிக்கு கேரளாவிற்கு சென்றடைந்தனர். அங்கு கேரள அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள தீயணைப்பு துறை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று காலை 10 மணியளவில் மீட்புப் பணிகளில் களமிறங்கினர்.
இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.