"பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" - திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் இரவில் காரில் அமர்ந்தபடி தனது நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அந்த நபரைத் தாக்கிக் கொடுங்காயத்தைச் செய்துவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தக் கொடிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்தப் போலீசார் அவர்கள் தப்பித்துஓட முயற்சித்த போது, அவர்களைக் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர்.
அந்த மாணவி இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி 2024 ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407 லிருந்து 5,319 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை, பாலியல் வன்கொடுமை முயற்சிகள் உட்பட, 406 லிருந்து 471 ஆக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 46 ஆக இருந்த பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 96 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!… pic.twitter.com/wvvmMJauFi
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 5, 2025
இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன. அதுமட்டுமின்றித் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் குடிபோதை காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர். இந்தியாவில் ஒப்பீட்டளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பது உண்மைதானென்றாலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதற்குக் காரணமாக மது பழக்கம் இருப்பதும் கவனத்திற்குரியது.
இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தப்படுவதில் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. 15க்கும் மேற்பட்ட வயதுடையோர் மக்கள் தொகையில் 12% குடிநோயாளிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. அப்போது இருந்ததை விட இன்று குடி நோயாளிகளால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.