“இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன் எம்.பி. பேட்டி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது , “நாடாளுமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் பெரியதா? என்ற கேள்வியை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது. பல்கலைகழகம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்போது, உச்சநீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் ஆவேசமாக விமர்சித்தார். தற்போது அவர் தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றம் பெரியதா? உச்சநீதிமன்றம் பெரியதா? என்ற விவாதத்தை எழுப்பியுள்ளார்.
இதற்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி பி.ஆர். கவாய், உச்சநீதிமன்றமாக இருந்தாலும் நாடாளுமன்றமாக இருந்தாலும் அவற்றையெல்லாம்விட அரசியலமைப்பு சட்டமே பெரியது என்ற சரியான கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை விசிக வரவேற்று பாராட்டுகிறது. அரசியலமைப்பு சட்டமே நமக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குகிறது.
புதிய இந்தியாவை கட்டமைக்கும் கோட்பாடுகளை கொண்டிருக்கிறது. மக்களவை எப்படி இயங்க வேண்டும், உச்சநீதிமன்றம் எப்படி இயங்க வேண்டும், நிர்வாகத்துறை எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை தரும் உச்சநீதிமன்றமே மேலானது. இதை பாசிச பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரை தமது கைப்பாவையாக பயன்படுத்தும் வகையில், இன்றைய ஆட்சியாளர் செயல்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
இலங்கை தமிழர் ஒருவர் கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது, “பிறநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு இடம் கொடுக்க இந்திய சத்திரம் அல்ல” என்று சொல்லியிருப்பது, மனிதாபிமானத்திற்கு புறம்பாக இருக்கிறது. புலம் பெயர்வது உலகமெங்கும் உள்ள அனைத்து நாடுகலிலும் நிகழக் கூடிய ஒன்று, இலங்கையில் இருந்தே புலம்பெயர்கள் என்று சொல்லமுடியாது. புலம் பெயர்வை நாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது.
இதையும் படியுங்கள் : “அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” – உச்சநீதிமன்றம் கருத்து!
நாட்டு எல்லைகளின் வரம்புகளைக்கொண்டு தடுக்க முடியாது. தஞ்சம் புகும் மக்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில், வரவேற்று அவர்களுக்குரிய அடைகளம் தருவது தேசத்தின் கடமை. ஐநா பேரவை அதற்குரிய வழிகாட்டுதல்களை தருகிறது. குறிப்பாக மனித உரிமை கவுன்சில் அகதிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமை குறித்து உலகநாடுகளோடு ஒப்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் அப்படி சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.