வெளியுலகம் காணாத நரிக்குறவர் இன மாணவர்கள் - சீர்காழி வட்டாட்சியரின் நெகிழ்ச்சி செயல்!
வெளியுலகமே காணாத நரிக்குறவர் இன மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு சீர்காழி வட்டாட்சியர் அழைத்து சென்றதுடன், அவர்கள் விரும்பிய புத்தகங்களை தனது சொந்த பணத்தில் வாங்கி கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா கடந்த 2-ம் தேதி துவங்கி, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவை பெருந்திரளான பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் நாள்தோறும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
சீர்காழி அருகே அரசூர் பகுதியில் நரிக்குறவர் இனமக்கள் வசித்து வருகிறனர். அங்குள்ள மாணவ - மாணவிகள் வெளியுலகமே அறியாமல் இருக்கும் செய்தி அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அனைவரையும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக தனது சொந்த பணத்தில் இரண்டு வேன்களை வாடகைக்கு எடுத்து அதில் 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வந்தார்.
அங்கு சென்ற மாணவிகள் அனைத்து புத்தக அரங்குகளையும், அறிவியல் சார்ந்த நிகழ்வுகளையும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர். அதோடு மட்டுமின்றி புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு, அவர்கள் கேட்ட அனைத்து நூல்களையும் தனது சொந்த பணத்திலேயே வாங்கி கொடுத்து வட்டாட்சியர் இளங்கோவன் அசத்தியுள்ளார்.
இதனையடுத்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். வெளியுலகம் அறியாத இந்த மாணவர்களின் கனவுகளை நினைவாக்கியத்துடன் அவர்களுக்கு தாயன்போடு வேண்டிய புத்தகங்களையும் வட்டாட்சியர் வாங்கி கொடுத்தது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வாழ்த்து தெரிவித்த நிலையில் பலதரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.