“தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் காட்டும் உறுதியில் உள்ளது” - துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஏப்ரல்.16) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் - பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேந்தரான பிறகு நடக்கும் முதல்முறையாக நடக்கும் ஆலோசனை கூட்டம்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். இந்த லட்சிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியோடு முன்னேறவும். தமிழ்நாட்டில் உயர்கல்வியில் உலக தரத்தை உருவாக்குவோம். இந்தியாவுடைய கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 51.3% ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகம்.
தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளோம். அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு ஜி.இ .ஆர்.ஐ-யை அடையலாம் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நாம் இப்போதே இலக்கை தாண்டி உள்ளோம். NIRF தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 22 பல்கலைக்கழகங்களுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தரமான கல்வியால் நாட்டையே நாம் வழி நடத்திக் கொண்டுள்ளோம். இது போதும் என நாம் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. பெரிய கனவுகளை காணவும் புதுமைகளை உருவாக்கவும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப நமது மாணவர்களை தயார்படுத்த நாம் இங்கு கூடியுள்ளோம். தமிழ்நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை நம் மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது..
அறிவியல், தொழில்நுட்பங்களில் உலகம் வேகமாக மாறி வருவதை கல்வியாளரார்கள் அனைவருக்கும் தெரியும். இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் நமது பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் சிறந்த முன்னெடுப்பை மேற்கொள்வது புதிய உலக தரம் வாய்ந்த கல்வித்தரங்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கான ஆலோசனைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்.
நாம் உருவாக்கப் போகின்ற மாற்றங்களின் பயன் நமது மாணவச் செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டின் பல்கலைக்கழங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்று கூடியுள்ளோம். இது தொடக்கம்தான். அடுத்த கட்ட ஆலோசனைகளை நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வியில் உள்ள சிறந்த ஆலோசகர்களுடன் மேற்கொள்ள உள்ளேன். உயர் கல்வித் துறை அமைச்சர் இந்த முன்னெடுப்பை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வார். உயர் கல்வித் துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்து புதிய, துடிப்பான தமிழ்நாட்டின் அடித்தளமாக உயர் கல்வித் துறையை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால் நமது மாணவர்கள் பின்தங்கி விடக்கூடும். அதனால், தாமதம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கைகளை கொண்டு வர வேண்டும். நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்கால திட்டம் மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. முதலில் பொருத்தமான கல்வி, இரண்டாவது வேலை வாய்ப்பு, மூன்றாவது அனைவரையும் உள்ளடக்கிய தன்மை. இந்த மூன்றையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். முதலாவதாக பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
உலகம் எப்போதும் இல்லாத வேகத்தில் மாறி வருகிறது. ஏஐ ,கிரீன் எனர்ஜி இண்டஸ்ட்ரி இதெல்லாம்தான் பொருளாதாரத்தை முடிவு செய்கிறது. நமது பல்கலைக்கழகங்களும் வளரும் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். டேட்டா சயின்ஸ், அட்வான்ஸ் மேனுஃபாக்சரிங் போன்ற புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். அடிப்படை கல்வி அறிவை நவீன திறன்களுடன் இணைத்து நமது மாணவர்களை வெறும் பட்டதாரிகளாக மட்டும் மாற்றாமல் இன்நோவேட்டிவாக மாற்ற வேண்டும்.
தொழில்துறையுடன் இணைந்து உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். கல்வி என்பது அறிவை பற்றியது மட்டுமல்ல எனவே மாணவர்களின் திறமையையும், அறிவையும் மேம்படுத்த வேண்டும். என்னுடைய கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அதில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். தொழில்துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளை பெரும் இந்த திட்டம் மாணவர்களை குளோபல் ஜாப் மார்க்கெட்டில் போட்டியிடும் வகையில் மாற்றியுள்ளது.
முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கவும் பயிற்சி திட்டங்களை விரிவாக்கவும் உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் பட்டப்படிப்பு சான்றிதலுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை பாதையில் அடி எடுத்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக தமிழ்நாட்டின் பலம் சமூகநீதியில் நாம் காட்டும் உறுதியில் தான் உள்ளது. தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையாகக் கொண்ட மாநிலம், எந்த திட்டமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக சமூகநீதி இருப்பதை பார்க்க முடியும். தமிழ் புதல்வன், புதுமைப்பெண்கள் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது மூன்று ஆண்டுகளில் 30 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் பொருளாதார சூழல் மாணவர்களின் திறமைக்கு தடை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியை அணுகக் கூடிய அளவில் நாம் மாற்றியுள்ளோம். இந்த வரிசையில் மாற்று திறனாளிகளுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் ஆதரவான கல்வியை உருவாக்குமாறு பல்கலைக்கழகங்களை கேட்டுக்கொள்கிறேன். துணைவேந்தர்கள், பதிவாளர்களான நீங்கள் அடிப்படையில் கல்வியாளர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பல்வேறு கனவுகளை நிறைவேற்றி தரும் செயல்பாட்டாளர்களாகவும் செயல்பட வேண்டும்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. தொழிலாளர்களும் அதிகரிக்கிறார்கள். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. 2033 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை பெறுவதை இலக்காக வைத்துள்ளது. இந்த இலக்கை தமிழ்நாடு உறுதியாக அடையும் என பத்திரிகைகள் எழுதுகின்றன. தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகவும், இந்தியாவில் முதன் மாநிலமாகவும் முன்னேறி வருகிறது. இப்படியான காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைகழகங்களின் பணி மிக முக்கியமானது.
நீங்கள் வெறும் கல்வியாளர்கள் மட்டுமல்ல இளைஞர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பவர்கள். நமது இளைஞர்களின் கல்வியையும், வாழ்க்கையும் உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது. பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியர் பயிற்சி அல்லது உட்கட்டமைப்பு மேம்பாடு என நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மெடிக்கல் டூரிசத்திற்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உலகெங்கிளிலிருந்தும் தமிழ்நாட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பலர் வருகிறார்கள். அதுபோல உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் நமது பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்க வரவேண்டும்.
உயர்கல்வியின் உலகளாவிய தலைமை இடமாக நமது தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும், அதுதான் எனது கனவு. காமராஜரின் ஆட்சிக்காலம் பள்ளி கல்வித்துறையின் பொற்காலம், கருணாநிதியின் ஆட்சி காலம் கல்லூரி கல்வியின் பொற்காலம் என்பது போல எனது ஆட்சி காலம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பொற்காலம் என பேசப்பட வேண்டும், அதுதான் நமக்கு தேவை. புதிய, துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டை முன்னோக்கி பயணிக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை கட்டி எழுப்ப வேண்டும். திமுக ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அனைவருக்குமான கல்வி, அடிப்படை கல்வி, கல்லூரி கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி கிடைக்க வேண்டும். தடையற்ற கல்வியை, தரமான கல்வியை அனைவரும் தரம் உயர வேண்டிய கல்வியை பல்கலைக்கழகங்கள் தர வேண்டும். லட்சிய பயணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியோடு முன்னேறுவோம். தமிழ்நாட்டை கல்வியில் உலக தரத்தில் முன்னேற்றுவோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.