கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் பொன்முடி. இவரது தந்தை கந்தசாமி பள்ளி தலைமை ஆசிரியராகவும் தாயார் மரகதம் பள்ளி ஆசிரியையாகவும் இருந்தவர்கள். இதனால் தான் தங்கள் மூத்த பிள்ளையான பொன்முடியை அந்தக் காலத்திலேயே டபுள் டிகிரி படிக்க வைத்தார்கள். பொன்முடியும் படிப்பில் கெட்டிக்காரர் என்பதால் எம்.ஏ., பி.எட்., எம்.பில், பி.ஹெச்.டி, என பல பட்டப்படிப்புகளை படித்து கல்லூரி விரிவுரையாளராக 15 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
திராவிடர் கழக மேடைகளில் பேசிவந்த பொன்முடி தன்னை நாத்திகராக அடையாளப்படுத்திக் கொண்டார். தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிட கழகத்தில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்துவிடும் என திமுகவுக்கு ஷிப்ட் ஆனார்.
பொன்முடியின் படிப்பும், அவரது துணிச்சலான கணீர் பேச்சும் கருணாநிதியை ஈர்த்தது. செஞ்சி ராமச்சந்திரனுக்கு போட்டியாக பொன்முடிக்கு எம்.எல்.ஏ. சீட், அமைச்சர் பதவி எனக் கொடுத்து அரசியலில் வளர்த்துவிட்டார்.
வன்னியர் சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தை சேர்ந்த பொன்முடிக்கு அதி முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி. செஞ்சி ராமச்சந்திரன் திமுகவிலிருந்து வெளியேறி வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு சென்றதற்கு பொன்முடி தான் காரணம் என்று கூறப்படுகிறது. கட்சியில் தனக்கெதிரானவர்களை ஓரங்கட்டி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் பொன்முடி. சட்டசபையில் ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்த்தார் பொன்முடி.
சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை (சில மாதங்க மட்டும்), கனிமவளத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை திமுக ஆட்சிக்காலங்களில் அவர் வகித்திருக்கிறார்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ரெஷிடென்சியல் பள்ளி என பல கல்வி நிறுவனங்களை பொன்முடி குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.