புத்தகத் திருடன் எழுத்தாளரான கதை - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் ரீஸ் தாமஸ், தனது சிறு வயதில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ‘தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகத்தை திருடிய கதை செய்தியில் வெளியான நிலையில் அதற்கு அந்த புத்தகத்தில் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள மொழி சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் ரீஸ் தாமஸ், ‘90ஸ் கிட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் தற்போது கேரளாவின் மூவாட்டுப்புழாவில் அமைந்துள்ள நியூ காலேஜ் புத்தக கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் புத்தகக் கடைக்கும், ரீஸ் தாமஸுக்கும் நீண்ட நெடும் பந்தம் இருப்பதாக தெரிகிறது. அதன் நினைவுகளை அவரே பகிர்ந்தார். “நான் அப்போது 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஹாரி பாட்டர் புத்தக வரிசையில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ‘தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகம் வெளியாகி இருந்தது.
அதை நான் பெறுவது குறித்து நண்பர்களுக்குள் சவால் எழுந்தது. என்னால் அது முடியாது என சொன்னார்கள். ஏனென்றால் புத்தகத்தை திருட வேண்டுமென்பது தான் சவால். நான் அந்தப் புத்தகத்தை அந்தக் கடையில் இருந்து தட்டித் தூக்கினேன்” என்கிறார் ரீஸ் தாமஸ். தற்போது அவர் எழுதிய புத்தகம் அதே கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் தாமஸ் அந்த கடைக்கு சென்றதும் அந்த பழைய சம்பவத்தை புத்தக கடைக்காரருடன் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புத்தகத்துக்கான தொகையையும் செலுத்த முன் வந்துள்ளார். ஆனால், அதனை கடைக்காரர் வாங்க மறுத்துள்ளார். ரீஸ் தாமஸின் இந்த நேர்காணல் செய்திகளில் வெளியானது. இதற்கு ‘தி டெத்லி ஹாலோஸ்’ புத்தகத்தில் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் வெளியான ரீஸ் தாமஸின் இந்த கதைக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இதைப் பகிர்வதன் மூலம் புத்தகத் திருடலை ஊக்குவிப்பதாக நான் குற்றம் சாட்டப்படுவேன் என்று எனக்குத் தெரியும். எனவே தயவுசெய்து புத்தகங்களைத் திருடாதீர்கள், புத்தகம் திருடுவது மோசமானது. எப்படியிருந்தாலும், இது மிகவும் அழகான விஷயம் மற்றும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது" என்று பதிவிட்டுள்ளார்.
I know I'll be accused of encouraging book stealing by sharing this, so PLEASE DON'T STEAL BOOKS, BOOK STEALING IS BAD. Anyway, this is the loveliest thing and made me really happy. https://t.co/9b0LBdE5YF
— J.K. Rowling (@jk_rowling) July 9, 2024