“மாநில அரசு NEP-ஐ செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” - உச்ச நீதிமன்றம் கருத்து!
புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன் இந்த கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த சூழலில் தமிழ் நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ் மணி என்ற பாஜக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அவர் அளித்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று(மே.09) நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவை தாக்கல் செய்ய நீங்கள் யார்? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பி, நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்று கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்தனர்.
அதற்கு மனு தாரர் தரப்பில் இருந்து , புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தாதது மாணவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக வாதிடப்பட்டது. அதன் பின்னர் நீதிபதிகள், ”மாநில அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” என்று மீண்டும் கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.