"மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
"தற்போது தென்மேற்கு பருவ மழையை எதிர்கொண்டு இருக்கிறோம். இயல்பான மழை பொழிவு தான் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர், காவேரி டெல்டா பகுதிகளுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய மலைச்சரிவு போன்ற பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும். அதிக கன மழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலத்தை திறம்பட எதிர்கொள்ள எல்லா மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள், வாகனங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.