சூடுபிடிக்கும் #SriLanka தேர்தல் களம் – சஜித் பிரேமதாசாவுக்கு பெருகும் ஆதரவு!
இலங்கை அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) தெரிவித்துள்ளது.
கடந்த 2022ல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லல்படும் அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக அதிபர் பதவியை விட்டு ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச.
இந்த சூழலில் இலங்கையில், வரும் செப்.21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடிக்குபின் நடக்க உள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் போட்டியிடுகிறார். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான காலக்கெடு கடந்த ஆக.16ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்தத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 38 போ் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) இலங்கை அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிஎன்ஏ செய்தித்தொடா்பாளா் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.