HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு - BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!
HYBE நிறுவனம் சார்ட்-ரிக்கிங் நடைமுறைகளை கையாண்டதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசுக்கு BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உலகளவில் மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்த BTS. இதன் தயாரிப்பு நிறுவனமான பிக் ஹிட்டின் தாய் நிறுவனமான HYBE, கடந்த சில வாரங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில், பழைய நீதிமன்ற வழக்கு ஒன்று, சட்டவிரோத சந்தைப்படுத்துதல் தொடர்பான வதந்திகளை சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்பியது.
இதனால், BTS உள்ளிட்ட பிரபல தென்கொரிய இசைக்குழுக்களின் சந்தைப்படுத்துதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரத் தொடங்கினர்.
BTS இசைக்குழுவின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, BTS-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், தென்கொரிய அரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம், 2017-ல் HYBE நிறுவனம் மேற்கொண்ட சார்ட்-ரிக்கிங் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.தென்கொரிய அரசாங்கத்தின் இந்த உத்தரவுக்கு BTS இசைக்குழுவின் ரசிகர்களான ஆர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் தென்கொரிய அரசை சாடி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
“தென்கொரிய அரசை நினைத்து வெட்கப்படுகிறேன். BTS இல்லாமல் தென் கொரியா ஒன்றும் இல்லை. BTS அதீத அன்பிற்கு தகுதியானது. நான் தென் கொரிய அரசை வெறுக்கிறேன். நாங்கள் BTS உடன் இருக்கிறோம். இறுதி வரை இருப்போம்” என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல்! 6 பேர் உயிரிழப்பு, 35 பேர் படுகாயம்!
“முதல் நாள் முதலே BTS வெற்றி பெற்று வருவது உங்களை கலக்கமடையச் செய்துள்ளது இதன்மூலம் தெரிகிறது. நீங்கள் எத்தகைய எதிர்வினையை சந்திக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் BTS. இறுதி வரை உடனிருப்போம்” என்று X தள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். “South Korea apologise to BTS” என்ற வாசகத்தை BTS ஆதரவாளர்கள் தங்களது பதிவுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.