For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளியின் மகன்!

05:11 PM Feb 20, 2024 IST | Web Editor
நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளியின் மகன்
Advertisement

மயிலாடுதுறை அருகே கூலி தொழிலாளியின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே முனிவளங்குடி பிள்ளையார் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.  அவர் மனைவி அஞ்சம்மாள்.  இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.  இவர்களது மகன் பாலதண்டாயுதம் தங்களது ஏழ்மை நிலையை உணர்ந்து சிறு வயது முதலே கூலி வேலைக்கு சென்று தனது பள்ளி படிப்பை சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

மேலும் ஏழ்மை நிலை காரணமாக படிக்க வசதியின்றி 7 ஆண்டுகள் படிக்க முடியாமல் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று உள்ளார்.  இருப்பினும் தான் வழக்கறிஞராக வேண்டும் என்ற விடா முயற்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எழுத்தர் ஆக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பின்னர் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து,  பின்னர் திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அரசு சட்ட கல்லூரியில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு முடித்து,  வழக்கறிஞராக பதிவு செய்து மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவிலில் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

இந்நிலையில் தாய்,  தந்தை இருவரும் இறந்துவிட,  அவர் திருமணம் செய்து கொண்டு தனது ஊரிலேயே வசித்து வந்தார்.  வழக்கறிஞராக இருக்கும் பொழுது தான் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தன்னை தயார் படுத்திக்கொண்டு தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று தனது 36 ஆவது வயதில் தற்பொழுது உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.

மேலும் 2015 -க்கு பிறகு மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நீதிபதியாக இளைஞர் தேர்வாகியுள்ளார்.  இந்த சூழலில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பாலதண்டாயுதத்திற்கு மயிலாடுதுறை வழக்கறிஞர் அலுவலகத்தில் மாலை அணிவித்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.  மேலும், தனது குடும்பத்தினரும் வீட்டில் கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஏழ்மை நிலையிலும் விடா முயற்சியிலும் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள பாலதண்டாயுதத்திற்கு வீடு தேடி சென்று பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இருந்த போதிலும் இதில் முழு மகிழ்ச்சி அடையாத பாலதண்டாயுதம், தான் நீதிபதியாக தேர்வாகியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய ஏழ்மை நிலையில் தன்னுடன் இருந்த தனது பெற்றோர் தற்பொழுது அதனை காண தன்னுடன் இல்லையே என மனம் கலங்கி கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags :
Advertisement