வாசிங்மெஷினுக்குள் நுழைந்தபாம்பு - சட்டையை துவைக்க வந்திருக்கும் என ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!
வாசிங்மெஷினுக்குள் பாம்பு நுழைந்த நிலையில் அதனை பழுதுபார்க்க வந்த தொழிலாளி துணி என நினைத்து எடுக்க முயற்சி செய்யும்போது பாம்பு கடியிலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளார்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். வீர தீர செயல்கள் போர்வீரர்கள் கூட பாம்பின் ஸ்ஸ்... சத்தத்திற்கு குலைநடுங்கிவிடுவர். சமீப காலமாக பாம்பு காட்டுக்குள் இருக்கிறதோ இல்லையோ பலரது வீட்டிற்குள் படையெடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஹெல்மெட்டில் பாம்பு, காலணியில் பாம்பு, இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் பாம்பு என தினந்தோறும் புதுபுதுப் வீடியோக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் கேரளாவில் வாஷிங் மெஷினுக்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள தளிபரம்பா பகுதியைச் சார்ந்த பி.வி.பாபு என்பவர் தனது வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் பழுதானதால் இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழிலாளியான ஜனார்த்தனன் கடம்பேரியை அழைத்துள்ளார். இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழிலாளாயான ஜனார்த்தனன் வாஷிங் மெஷினை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.
இதன் பின்னர் வாஷிங் மெஷினை திறந்த போது அதன் உள்ளே கருப்பு நிறத்தில் துணி ஒன்று இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து துணியை எடுத்து அவர் வெளியே போடுவதற்காக கையை வாஷிங் மெஷினுக்குள்ள விட்டபோது திடீரென குட்டி நாகப்பாம்பு ஒன்று சீறி கடிக்க பாய்ந்துள்ளது. கனநேரத்தில் உஷாரான அவர் கையை எடுத்து பாம்புக் கடியில் இருந்து தப்பித்துள்ளார்.
வாஷிங் மெஷின் கடந்த இரண்டு வாரங்களாக வேலை செய்யாததால் அதனை மூடி வைத்துள்ளனர். இதனால் உள்ளே பாம்பு நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து குட்டி பாம்பை மீட்டு சென்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்ததைத் தொடர்ந்து அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள் பாம்பு தனது சட்டையை துவைப்பதற்காக வாஷிங் மெஷினுக்குள் வந்திருக்கலாம் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.