For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேசத்தில் நிலைமை சீரடைந்தது - மீண்டும் இணைய சேவை தொடக்கம்!

07:33 AM Jul 29, 2024 IST | Web Editor
வங்கதேசத்தில் நிலைமை சீரடைந்தது   மீண்டும் இணைய சேவை தொடக்கம்
Advertisement

வங்கதேசத்தில் நிலைமை சீரடைந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.  இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 16ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த வன்முறை காரணமாக 147 பேர் உயிரிழந்தனர், மேலும் 1500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.   போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு  நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.  வன்முறையின்போது சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க கடந்த ஜூலை 18-ஆம் தேதி கைப்பேசி இணைய சேவை அரசால் முடக்கப்பட்டது. மறுநாள் வன்முறையில், தரவு மையத்திற்கு அருகில் இருந்த பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது.

தீயின் தாக்கத்தால் நாட்டின் 'பிராட்பேண்ட்' சேவை 30 முதல் 40 சதவீதம் பாதிக்கப்படும் என்று வங்கதேச இணைய சேவை சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் நாட்டின் இணைய சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி மீண்டும் 'பிராட்பேண்ட்' இணைய சேவை மட்டும் படிப்படியாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வங்க தேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் சுனைத் அஹமது பலாக் தெரிவித்ததாவது..

'வங்கதேசத்தில் கைப்பேசி இணைய சேவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துப் பயனர்களுக்கும் 5ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மீண்டும் அணுகுவது குறித்து அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Tags :
Advertisement